Pages

Saturday, August 31, 2019

வேண்டாமே...பாஸ்ட் புட் கலாசாரம்

இன்றைய யூத், பரபரப்பான வாழ்க்கைக்கு நடுவே சிக்கி கொண்டு, சாப்பிடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.சரி...சாப்பிடும் உணவுகளிலாவது ஆரோக்கியம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. பாஸ்தா, பீட்சா, பர்கர், சாண்ட்விச், பிரைடு ரைஸ், நுாடுல்ஸ் என வாய்க்கு ருசியாக இருக்கிறதா என்றுதான் பார்க்கின்றனர்.

இந்த உணவு பழக்க முறை சரியா தவறா?அரசு மருத்துவமனை குடல் இரைப்பை மற்றும் கல்லீரல் பிரிவின் உதவி பேராசிரியர் அருள்செல்வன் கூறியதாவது:இளைஞர்களிடமும் உடற்பயிற்சி, ஆரோக்கியமான விளையாட்டுகளின் மீதுள்ள ஆர்வம் குறைந்து விட்டது. அதிக கொழுப்பு, எண்ணெயில் பொறித்த உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் உடல் பருமன் பாதிப்பு, கல்லீரல் சுருக்கம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

செரிமானம் அடையாத, சுகாதாரமில்லாத உணவு மற்றும் தண்ணீரை பயன்படுத்துவோருக்கு, ஹெபாடிடீஸ் ஏ,இ, எனப்படும் கல்லீரல் பாதிப்பு, வாந்தி, பேதி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படவும் காரணமாகிறது.உண்ணும் உணவு, ருசி மற்றும் கலராக இருக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. இவற்றை உண்ணும்போது, உணவு குழாய், சிறுகுடல், பெறு குடலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.காரமான உணவுகளால், வயிற்றுப்புண், அமிலத்தன்மை போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது. 

ரசாயனம் கலந்த குளிர்பானங்கள் குடிக்கும்போது, வயிற்றில் அசிடிட்டி, அல்சர் பிரச்னை ஏற்பட காரணமாகிறது.இதனை தவிர்க்க, முதலில் சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும், ஆரோக்கியமான உணவு எடுத்து கொள்வது நல்லது. கடையில் வாங்கும் காய்கறிகளை, முறையாக சுத்தம் செய்து பின்னர் சமையலுக்கு பயன்படுத்தலாம்.பாஸ்ட்புட் உணவை அடிக்கடி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.அவ்வாறு, சாப்பிட்டாலும், அதற்கேற்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment