Pages

Friday, January 24, 2014

சேமிப்பை அதிகரிக்கும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

வரவு, செலவு, சேமிப்பு, கொடுக்கல், வாங்கல் என எல்லாக் கணக்குகளையும் தனித்தனியாக நிர்வகிக்க முடியும்.
இன்றைய நிலையில் ஸ்மார்ட்போன்கள் மனித வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டன. ஒருவரைத் தொடர்புகொள்வதற்கு மட்டும்தான் செல்பேசி என்ற நிலை மாறி, இன்று ஸ்மார்ட் போன்கள், கேமரா,  மடிக்கணினியின் பணிகளையும் செய்வதால் மக்களைக் கவர்ந்து வருகின்றன. மக்களின் விருப்பத்துக்கு ஏற்றாற்போலக் குறைந்த விலைக்கு நிறைந்த சேவைகளுடன் ஸ்மார்ட்போன்களைப் போட்டிப் போட்டுக்கொண்டு மொபைல் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.
இந்த ஸ்மார்ட்போன்களில் இருக்கும் 'ஆப்ஸ்என்று  சொல்லப்படும் அப்ளிகேஷன்கள் ஏராளம். அதில் அனைவருக்கும் பயன் தருவது 'ஃபைனான்ஷியல் ஆப்ஸ்கள்.
இந்த 'ஃபைனான்ஷியல் ஆப்ஸ்கள் ஒவ்வொருவரின் வரவு செலவு மற்றும் சேமிப்பு விவரங்களை உள்வாங்கிக்கொண்டு அதை வரைபடங்களுடன் சரியான விகிதத்தில் வெளிப்படுத்துகின்றன. தினமும் ஏதேதோ செலவு செய்துவிட்டு, எதற்காகச் செலவு செய்தோம் என்பது தெரியாமல் தவிப்பவர்களுக்கு இவை மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த 'ஃபைனான்ஷியல் ஆப்ஸ்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
  சிறப்பம்சங்கள்!
ஒருவர் தினமும் செய்யும் செலவுகளை இந்த ஆப்ஸில் குறித்துவிடுவதால், எதற்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்பதைத் துல்லியமாகக் காட்டிவிடும். இதனால், தேவையில்லாத செலவுகளைக் குறைத்துச் சிக்கனத்தை அதிகப்படுத்த முடியும்.
வரவு, செலவு, சேமிப்பு, கொடுக்கல், வாங்கல் என எல்லாக் கணக்குகளையும் தனித்தனியாக நிர்வகிக்க முடியும். இதனால், தேவையில்லாத குழப்பங்கள் இருக்காது.
இந்த ஆப்ஸ்களில் பல நாடுகளின் ரூபாய் மதிப்பீடு வசதி இருப்பதால், வசதிக்கு ஏற்றாற்போல அவரவர்களின் வரவு, செலவுச் சேமிப்புக் கணக்குகளின் மதிப்பைக் கணக்கிட்டுக்கொள்ளலாம்.
ஏற்கெனவே செய்துவரும் வரவு செலவுக் கணக்குகள்போக, புதிய கணக்குகளைத் துவங்கி அதுபற்றிய விவரங்களையும் இதில் பதிந்துவைக்க முடியும். வாரத்துக்கு, மாதத்துக்கு, வருடத்துக்கு ஒருமுறை எனத் தங்களின் விவரக் கணக்குகளைக் காலநிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும்.
 ஏற்கெனவே உள்ள கணக்குகள், தேவையில்லை என்று நினைத்தால் அதை அழித்துப் பிற்பாடு புதிய கணக்குகளைத் தொடங்கும் வசதியும் இதில் உள்ளது.
பிறர் உங்களின் வரவு, செலவு விவரங்களை எடுத்துப் பார்க்காதபடி பாஸ்வேர்டு லாக் வசதியும் இதில் உள்ளது.
இலவசமாகக் கிடைக்கும் இந்த அப்ளிகேஷன்களை மிக எளிதாகப் பயன்படுத்தலாம்.
இதில் பதிவு செய்திருக்கும் வரவு செலவு சேமிப்பு விவரங்களைக் கூகுள் டிரைவில் பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ள முடியும்.  தேவைப்படும்போது ப்ரின்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.
  ஃபைனான்ஷியல் ஆப்ஸ்கள் பலவிதம்!

இந்த ஆப்ஸ்கள் பல பெயர்களுடன் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் சில,
 ஃபைனான்ஷியஸ் - எக்ஸ்பென்ஸ் மேனேஜர் (Financius - Expense Manager).
எக்ஸ்பென்ஸ் மேனேஜர் (Expense Manager)
மணி லவ்வர் - எக்ஸ்பென்ஸ் மேனேஜர் (Money Lover - Expense Manager)
 
ஃபைனான்ஷிஸ்டோ - எக்ஸ்பென்ஸ் மேனேஜர் (Financisto - Expense Manager)
ஈஸி பட்ஜெட் - எக்ஸ்பென்ஸ் ட்ராக்கர் (Easy budget expense tracker)
இந்த ஐந்து ஆப்ஸ்களில் முதலாவதும், ஐந்தாவதுமாக இருக்கிற ஆப்ஸ்கள் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். நடுவில் இருக்கிற மூன்று ஆப்ஸ்கள் 5 லட்சம் முதல் 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்

செலவு எப்படி ஆகுதுன்னே தெரியலை என்று புலம்புகிறவர்கள், முதலில் இந்த ஆப்ஸ்களைப் பயன்படுத்தத் தொடங்கலாமே!

Wednesday, January 22, 2014

கிரெடிட், டெபிட் கார்டில் ஷாப்பிங் செய்கிறீர்களா...உஷார்!


கிரெடிட், டெபிட் கார்டில் ஷாப்பிங் செய்கிறீர்களா...உஷார்! கணக்குரகசியங்களை
திருடும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு

டெபிட் கார்டு வந்த பிறகு, அதை பயன்படுத்திதான் பெரும்பாலானோர் ஷாப்பிங் செய்கின்றனர். பிக்பாக்கெட் பயமில்லை, பாக்கெட் கனமில்லை என்ற கூடுதல் தெம்பும் வந்து விடுகிறது.   இப்படி ஒருபுறம் வசதி இருந்தாலும், இன்னொரு புறம் தொழில்நுட்ப வளர்ச்சி நம் செயல்களை எளிதாக்கி கொண்டிருக்க, ஸ்கிம்மர் மெஷின், பிஷ்ஷிங் என நவீன முறையில் திருட்டுகள் அமோகமாக நடக்கின்றன. கடைகளில் கார்டு பயன்படுத்தி பொருள் வாங்குவது போல, ஆன்-லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இதுபாதுகாப்பு இல்லாதது என்று தெரிந்தாலும், வசதி கருதி பலரும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, கடைகளில் பொருள் வாங்கும்போது கார்டு மூலமான பண பரிவர்த்தனையை பாதுகாப்பானதாக ஆக்கும் வகையில், டெபிட் கார்டுகளுக்கு பாஸ்வேர்டு எண் பயன்படுத்துவதை ரிசர்வ் வங்கி கட்டாயம் ஆக்கியது. இருப்பினும் இணையதள திருடர்கள் புதுப்புது ரூபத்தில் தங்கள் வேலையை காட்டிக்கொண்டுதான் உள்ளனர். எனவேதான், இணையதள தாக்குதல்களுக்கு அதிகம் ஆளாகும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

இணையதள பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும், முழுவதுமாக இதை கட்டுப்படுத்த முடிவதில்லை. இப்படிப்பட்ட நிலையில், டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவரின் கணக்கு ரகசிய விவரங்களை திருடும் வைரஸ் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ‘‘டெக்ஸ்டர்’’ என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸ், கடைகளில் கார்டு உரசும்போது அந்த கார்டில் உள்ள கார்டுதாரரின் பெயர், கணக்கு எண், காலாவதி தேதி, சிவிவி எண் மட்டுமின்றி ரகசிய குறியீட்டு எண்ணையும் திருடி விடுகிறதுஎனவே, பிஷ்ஷிங் மெயில் போன்றவை குறித்து உஷாராக இருக்க வேண்டும். பொது இடங்களில் உள்ள ஒயர்லெஸ் நெட்வொர்க்குகள், பொது இணையதள மையங்களில் பண பரிவர்த்தனை செய்வதை தவிர்க்க வேண்டும் என அவசர நிலைக்கான இந்திய கணினி செயல்குழு (சிஇஆர்டி) அறிவுரை கூறியுள்ளது.


நீங்க என்ன செய்யணும்?

பண பரிவர்த்தனை பாதுகாப்பு விஷயத்தில் நாம் கூடுதலாக கவனம் செலுத்தினால் போதும். பாதுகாப்பதும், அதை நழுவ விடுவதும் நம் கையில்தான் உள்ளது. உங்கள் டெபிட் கார்டுக்கான தனிநபர் அடையாள எண் (பின்) கேட்கும் வியாபார மையங்களில், ஸ்கிம்மிங் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
 
பின் நம்பர் அழுத்தும் இடத்திலும், கார்டு உரசும் இடத்திலும் வித்தியாசமாக எதாவது பொருத்தப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுரை கூறுகின்றனர். என்னதான் நவீன வசதிகள் வந்தாலும், கையில் பணம் கொடுத்து வாங்கினால்தான் பாதுகாப்பு என்று பழைய நடைமுறைகளையே பயன்படுத்துபவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.