Pages

Saturday, August 31, 2019

ஞானிகளின் அருளை பெற வேண்டுமா


அன்பு, ஈகை, இரக்கம், விட்டுக் கொடுப்பது, தியாகம்- என, எவ்வளவு கேள்விப்படுகிறோம். அந்த பாதைகளில், ஏதாவது ஒன்றில், கொஞ்ச துாரமாவது செல்லலாம் என்றால், போன வேகத்தை விட, வெகு வேகமாகத் திரும்ப வேண்டியதாகிறது. 

அரசர் ஒருவர் செய்ததைப் பார்க்கலாம். ஏதாவது விடை கிடைக்கும்... 
ஜானசுருதி என்ற அரசர், நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். வழிப்போக்கர்கள் தங்கி, உணவுண்டு, இளைப்பாறி செல்ல, அறச்சாலைகள்; வேத- சாஸ்திர- கலைகளை பயிற்றுவிக்க, கல்விச் சாலைகள் என, அரசர், செய்தவை ஏராளம்.
அவரின் அறப்பண்பை பாராட்ட நினைத்த தேவர்கள் இருவர், அன்னப் பறவைகளாக மாறி, உப்பரிகையின் மேல் மாடத்தில் அமர்ந்திருந்த, அரசருக்கு எதிரில் பறந்தனர். 
அதில் ஒரு அன்னப் பறவை, 'இங்கே, அரசர், ஜானசுருதி உட்கார்ந்திருக்கிறார். அவர் மேல் உன் நிழல் படாதபடி, ஒதுங்கி வா... மிகுந்த தர்மவானான அவர் மேல், உன் நிழல் பட்டால் எரிந்து விடுவாய்...' என்றது. 
அதைக் கேட்ட, மற்றொரு அன்னம், 'அப்படியா... இருக்கட்டும்... ஆனால், இந்த அரசரை விட, எல்லையில், ரைக்வர் எனும் வண்டிக்காரர் இருக்கிறார்; அவருக்கு உள்ள மகிமை, நீ சொல்லும் அரசர், ஜானசுருதிக்கு வராது...' என்றது.
'என்ன... ஒரு சாதாரண வண்டிக்காரருக்கு அவ்வளவு மகிமையா...' என்றது, முதல் அன்னம்.
'மகா புண்ணியசாலி, அவர். பிரம்ம ஞானியான அவருக்கு, ஈடு சொல்ல முடியுமா என்ன...' என்றது, இரண்டாம் அன்னம். 
கேட்டுக் கொண்டிருந்த அரசரின் மனம், அலை பாய்ந்தது. அந்த மகான், ரைக்வரை உடனே பார்க்க எண்ணினார்.
'ரைக்வரை தேடி, தகவலறிந்து வாருங்கள்...' என, ஆட்களை அனுப்பினார். 
அவர்களும், அங்கு இங்கு என்று தேடி, ஒரு வழியாக கண்டுபிடித்தனர். தகவலறிந்த அரசர், பசுக்கள்-, பொன்மாலை,- தங்கக் காசுகள் என, பலவற்றையும் ஏராளமாக எடுத்து போய், ரைக்வரிடம் சமர்ப்பித்தார்.
'சுவாமி... தாங்கள் ஆராதனை செய்து வரும், தெய்வ ஸ்வரூபத்தை, அடியேனுக்கு உபதேசிக்க வேண்டும். தங்கள் திருவாக்கால், மெய் ஞானத்தையும் உணர விரும்புகிறேன்...' என்று வேண்டினார். 
ரைக்வரோ, 'திட மனது இல்லாத அரசே... இந்த குப்பைகளை எல்லாம் எடுத்து, வந்த வழியாக திரும்பிப் போ...' என்றாரே தவிர, அரசரின் காணிக்கைளை, கண் திறந்து பார்க்கவில்லை.
மறுநாள், மேலும் பல காணிக்கை பொருட்களுடன் போய் பார்த்து, எண்ணம் பலிக்காமல் திரும்பினார், அரசர்.
அடுத்த நாள், காணிக்கை பொருட்களோடு, பரிவாரங்களையும், தன் மகளையும் அழைத்து போனார், அரசர். 
'ஞானியே... அடியேன் குமாரியை, தங்கள் துணையாக, -பத்தினியாக ஏற்று, அடியேனின் ஞான வேட்கையைத் தீர்த்து வைக்க வேண்டுகிறேன்...' என, வேண்டினார்.
ஞானியோ, எதையும், யாரையும் திரும்பி கூட பார்க்கவில்லை; பதிலும் பேசவில்லை. அரசருக்கு உண்மை புரிந்தது. 
'துறவிக்கு, வேந்தனும் துரும்பு. இதை அறியாமல், மேலும் மேலும் செல்வத்தை காட்டி, இவரிடம் இருந்து, மெய்ஞானத்தைப் பெற்று விடலாம் என்று நினைத்தது, எவ்வளவு பெரிய தவறு...' என்று எண்ணினார், அரசர்; தான் எடுத்து வந்த அனைத்தையும், திருப்பி அனுப்பினார். 
அது மட்டுமல்ல, தன் ராஜ உடைகளை களைந்து, எளிய உடைகளை அணிந்து, ஞானியின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். 
அரசருக்கு உபதேசித்து, அவரை வாழ்வின் நற்பயன் பெறச் செய்தார், மகா ஞானியான ரைக்வர்.
ஞானிகளின் அருளைப் பெற வேண்டுமானால், அவர்கள் பாதையில் நாம் போக வேண்டும், என்பதை விளக்குகிறது. இதிகாசங்களிலும் உபநிடதங்களிலும் பிரபலமானது, இக்கதை.

பி.என். பரசுராமன்

வேண்டாமே...பாஸ்ட் புட் கலாசாரம்

இன்றைய யூத், பரபரப்பான வாழ்க்கைக்கு நடுவே சிக்கி கொண்டு, சாப்பிடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.சரி...சாப்பிடும் உணவுகளிலாவது ஆரோக்கியம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. பாஸ்தா, பீட்சா, பர்கர், சாண்ட்விச், பிரைடு ரைஸ், நுாடுல்ஸ் என வாய்க்கு ருசியாக இருக்கிறதா என்றுதான் பார்க்கின்றனர்.

இந்த உணவு பழக்க முறை சரியா தவறா?அரசு மருத்துவமனை குடல் இரைப்பை மற்றும் கல்லீரல் பிரிவின் உதவி பேராசிரியர் அருள்செல்வன் கூறியதாவது:இளைஞர்களிடமும் உடற்பயிற்சி, ஆரோக்கியமான விளையாட்டுகளின் மீதுள்ள ஆர்வம் குறைந்து விட்டது. அதிக கொழுப்பு, எண்ணெயில் பொறித்த உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் உடல் பருமன் பாதிப்பு, கல்லீரல் சுருக்கம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

செரிமானம் அடையாத, சுகாதாரமில்லாத உணவு மற்றும் தண்ணீரை பயன்படுத்துவோருக்கு, ஹெபாடிடீஸ் ஏ,இ, எனப்படும் கல்லீரல் பாதிப்பு, வாந்தி, பேதி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படவும் காரணமாகிறது.உண்ணும் உணவு, ருசி மற்றும் கலராக இருக்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. இவற்றை உண்ணும்போது, உணவு குழாய், சிறுகுடல், பெறு குடலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.காரமான உணவுகளால், வயிற்றுப்புண், அமிலத்தன்மை போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது. 

ரசாயனம் கலந்த குளிர்பானங்கள் குடிக்கும்போது, வயிற்றில் அசிடிட்டி, அல்சர் பிரச்னை ஏற்பட காரணமாகிறது.இதனை தவிர்க்க, முதலில் சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும், ஆரோக்கியமான உணவு எடுத்து கொள்வது நல்லது. கடையில் வாங்கும் காய்கறிகளை, முறையாக சுத்தம் செய்து பின்னர் சமையலுக்கு பயன்படுத்தலாம்.பாஸ்ட்புட் உணவை அடிக்கடி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.அவ்வாறு, சாப்பிட்டாலும், அதற்கேற்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Friday, August 23, 2019

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்
குருவாயூரப்பன் மீது நாராயண பட்டத்திரி பாடிய நாராயணீயம். இதைப் படித்தால் 
கேட்டது கிடைக்கும். சொன்னது பலிக்கும்.

* மகாவிஷ்ணுவே! கிருஷ்ணா! வேதத்தால் போற்றப்படும் சச்சிதானந்த வடிவம் கொண்டவனே! கோபியரின் மனங்களில் இருப்பவனுமாகிய உன்னை, துன்பம் தீர அடியேன் வணங்குகிறேன். 

* மும்மூர்த்திகளில் உயர்ந்து திகழும் சர்வேஸ்வரா! கருமை நிறக் கண்ணா! மந்திர சாஸ்திரங்களில் எங்கும் நிறைந்திருப்பது நீயே என சொல்லப்பட்டுள்ளது. உன் திருப்பாதங்களைப் போற்றுகிறேன். 

* தேவாதி தேவனே! எல்லா உயிருக்கும் உயிராக விளங்கும் கிருஷ்ணரே! உண்மையில்லாத பொருட்களில் விருப்பம் கொண்டு துன்பம் அடையும் மனிதன், உன் திருவடியை வணங்கினால் எல்லா இன்பத்தையும் அடைவான். அவ்வாறு அருள் செய்ய வேண்டுமென உன் பாதங்களை வணங்குகிறேன். 

* எங்கும் நிறைந்த பரம்பொருளே! உடலாலும், மொழியாலும்,உள்ளத்தாலும் இப்பூமியில் எதையெல்லாம் செய்கிறேனோ அத்தனையையும் உன்னிடத்திலேயே சமர்ப்பிக்கிறேன். உன் திருவடியில் சரணடைகிறேன். 

* உன்னிடம் சரணடைந்தவர்கள், எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவார்கள். தேவாதி தேவனே! அப்படிப்பட்ட நல்லவர்களின் தொடர்பு எப்போதும் கிடைக்கட்டும். அவர்களுடைய நல்ல வார்த்தையால் பாவம் நீங்கி பக்தி பெருகட்டும்.

* ஜகந்நாதா! ஹரி! பஞ்சபூதம், பிரபஞ்சம், பறவை, மீன், விலங்கு முதலியவற்றையும், நண்பர்கள், எதிரிகளையும் கூட, உன்னுடைய உருவமாகவே உள்ளத்தில் நினைக்கிறேன். இவ்விதம் வழிபடுவதால் பக்தியும், ஞானமும் வாய்க்கும் பேறு பெற்றேன். 

* பெருமானே! உன்னிடம் ஒன்றி விட்டதால் வழக்கமான பசி, தாகம் மறந்து விட்டது. கண நேரமும் உன்னை மறவாமல் செயல்களில் ஈடுபாடு கொண்டுள்ளேன். மனத்தளர்ச்சி இப்போது இல்லை. உன் அருளால் மகிழ்ச்சியோடு எங்கும் உலாவுகிறேன். 
* பெருமாளே! கலிகாலத்தில் உன் பெயரைச் சொன்னாலும், உன்னைப் பற்றிப் பாடினாலுமே போதும்! உன் அருளைப் பெற்று விடலாம். இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதால் எல்லாரும் இந்த யுகத்தில் பிறக்க ஆசைப்படுகின்றனர். பாக்கியவசத்தால் இந்தக் கலியுகத்தில் பிறந்த என்னை ஏற்றுக் கொள்வாய்!
* புருஷோத்தமா! கங்கா ஸ்நானம், கீதை வாசித்தல், காயத்ரி மந்திரம் சொல்லுதல், துளசி அணிவித்தல், கோபி சந்தனம் அணிதல், சாளக்ராம பூஜை, ஏகாதசி விரதம், ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் இவை எட்டும் உன் அருளைப் பெற்றுத்தரும். இந்த எட்டு மார்க்கங்களிலும் என்னை ஈடுபடுத்தி, உன்னை அடைய அருள் புரிவாயாக.

ஜன்னல் வழியே தரிசனம்



தன் கணவர் குழந்தையாக இருந்த போது எப்படி இருந்தார் என்பதை அறிய ருக்மணி ஆசைப் பட்டாள். அதனால் தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு சிலை செய்தாள். அச்சிலையே உடுப்பியில் இன்று வழிபாட்டில் உள்ளது. மத்வாச்சாரியாரால் பூஜிக்கப்பட்ட இந்த கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ளது. 

இக்கோயிலுக்கு வாசல் கதவுகள் இல்லை. குழந்தை வடிவில் சுவாமி காட்சி தருகிறார். வலக்கையில் தயிர் கடையும் மத்தும், இடக்கையில் வெண்ணெய் ஏந்தியுள்ளார். ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழி மட்டும் உண்டு. கருவறையின் நுழைவுவாயில் விஜயதசமி அன்று மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் சன்னதியின் இருபுறமும் உள்ள ஜன்னல் வழியாக தரிசிக்கலாம்.

Thursday, August 22, 2019

வாழ்க்கையில் நம்பர் 1 ஆக என்ன செய்வது?


வாழ்க்கையில் நம்பர் 1 ஆக என்ன செய்வது?படிப்பு, தொழில், விளையாட்டு, குடும்பம் என்று வாழ்க்கையில் எல்லாவற்றிலும் முதன்மையானவனாக இருக்க விரும்புகிறேன். ஐ மஸ்ட் பி த பெஸ்ட்! இந்த தன்னம்பிக்கையைப் பெற, என் வெற்றித் தாரக மந்திரம் என்னவாக இருக்க வேண்டும்? ஒரே ஒரு அறிவுரையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்!


சத்குரு: டெலிவிஷன் கேட்ட தோழி
எப்படிப்பட்டவனைக் காதலனாக ஏற்க முடியும் என்று பெண்கள் கருத்தரங்கம் ஒன்று நடந்தது.

ஒருத்தி சொன்னாள்... "அவன் பார்க்க அழகாக இருக்க வேண்டும். நான் சொன்னால் மட்டுமே பேச வேண்டும். நிறுத்தச் சொன்னால் நிறுத்த வேண்டும். உலக நடப்புகள் பற்றி எது கேட்டாலும் சொல்ல வேண்டும். பிசினஸ் மட்டுமில்லாமல் நாடகம், இசை, சினிமா என எல்லாவற்றிலும் ஆர்வமிருக்க வேண்டும். இருந்த இடத்திலிருந்து அவனைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை எனக்குத் தர வேண்டும்!"

அடுத்த பெண் சொன்னாள்... "நீ கேட்பது காதலன் இல்லை. டெலிவிஷன்!"
ஒற்றை அறிவுரையில் எல்லாவற்றிலும் முதன்மையாக விளங்க வேண்டும் என்று நீங்கள் கேட்பதும் இப்படித்தான் இருக்கிறது.

வாழ்க்கைக்குப் பல தன்மைகள் உண்டு. ஒவ்வொரு தன்மைக்கும் தக்கபடி அனுசரித்துச் செயல்புரிய வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரே வழிமுறை வேலை செய்யாது.

தியானம் செய்யக் கண்களை மூடச் சொல்லலாம். வாகனம் செலுத்தும்போது, கண்களை மூடிக் கொண்டால், என்ன ஆகும்? அதற்குச் சொன்னதை இதற்குச் செய்து பார்க்க முடியுமா?

நிற்பது எப்படி, நடப்பது எப்படி விழுந்தால் எழுந்திருப்பது எப்படி என ஒவ்வொன்றையும் இன்னொருத்தர் அறிவுறுத்திக் கொண்டு இருந்தால், உங்களுக்கு எதற்கு புத்திசாலித்தனம்?

இன்னொரு விஷயம் யாருடனும் ஒப்பிட்டு உங்களை முதன்மை ஆக்கிக் கொள்ள நினைக்காதீர்கள். தாழ்த்திப் பார்த்தும் வேதனை கொள்ளாதீர்கள்.

வந்ததற்கு பெருமை... போவதற்கு வருத்தம்...
மைதனாத்தில் ஒரு காண்டாமிருகம் மேய்ந்து கொண்டு இருந்தது. ஒரு ஈ வந்து அதன் கொம்பில் உட்கார்ந்து, சற்று நேரம் பொறுத்து காண்டா மிருகத்திடம் அது கேட்டது... "நான் புறப்படட்டுமா?"

கண்டாமிருகம் சொன்னது... "அட, நீ வந்ததையே நான் கவனிக்க வில்லை! இத்தனை நேரம் இருந்ததையும் உணரவில்லை! விட்டுப் போவதற்காக மட்டும் கவலைப்படப் போகிறேனா?"

இந்தப் பிரபஞ்சத்தில் நீங்களும் அப்படித்தான். வந்ததையும் பெருமையாக நினைக்காதீர்கள். போவதற்காகவும் வருந்தாதீர்கள்.

எப்போது இது மேல், இது கீழ் என்று மனதில் நிர்ணயிக்கிறோமோ, அப்போதுதான் பிரச்சனை பிறக்கும். கடல் ஆழமாக இருப்பதால், உயரமாக இருக்கும் மலையைவிட மட்டமா?

எல்லாவற்றிலும் நான்தான் எல்லோருக்கும் தலைமையான இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தால், வாழ்க்கையே போராட்டமாகிவிடும். அந்தப் பதைப்பில், மிகச் சுலபமாக தீர்வு கூட சில சமயம் புரியாமல் போய்விடும் எங்கே கால் வைக்கக் கூடாதோ, அங்கே கால் வைப்பது போன்ற முட்டாள்தனங்கள் நேர்ந்துவிடும்.

சங்கரன்பிள்ளையின் அகங்காரம்
விமான நிலலயத்தில் சங்கரன்பிள்ளை தன் நண்பரைச் சந்திக்க காத்திருந்தார்.
சற்றுத் தள்ளி, நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மிகப் பிரபலமான நடிகர் வந்து அமர்வதைக் கவனித்து, அவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்...

"ஒரு சிறு உதவி செய்வீர்களா? இப்போது என் நண்பர் வருவார். அவருடன் நான் பேசிக் கொண்டு இருக்கும்போது, நீங்கள் சும்மா என்னிடம் வந்து ஒரு ஹலோ சொன்னால், என் மதிப்பு சர்ரென்று உயரும். அவர் அசந்து போவார்" என்று கேட்டுக் கொண்டார். நடிகரும் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார்.

நண்பர் வந்தார். சங்கரன்பிள்ளை அவரிடம் பேசிக் கொண்டு இருந்தபோது, சூப்பர் ஸ்டார் அவர்களை நெருங்கினார். விழிகளில் ஆச்சர்யம் காட்டி, "ஹலோ சங்கரன்பிள்ளை... எங்கே இந்தப் பக்கம்?" என்றார்.

சங்கரன்பிள்ளை முகத்தைச் சுருக்கிக் கொண்டார்.. "அடடா உங்கள் தொந்தரவு தாங்க வில்லையே..! நான் முக்கியமான விஷயம் பேசிக் கொண்டு இருக்கிறேன். அப்படிப் போய் உட்காருங்கள். நேரமிருந்தால் அப்புறம் பார்க்கிறேன்."

எல்லாவற்றிலும் முதன்மை என்பது ஆர்வத்தில் ஆரம்பித்து, சங்கரன்பிள்ளைக்கு நேர்ந்தது போல் அகங்காரத்தில் கொண்டு விட்டுவிடும்.

சாராயமே மருந்து!
வாழ்க்கையில் முதன்மையான இடத்துக்கு வர, ஒவ்வொரு அடியையும் நீங்கள் அல்லவா முழு விழிப்பு உணர்வுடன் எடுத்து வைக்க வேண்டும்?

போகும் இடத்திலெல்லாம், 'ஒரு அட்வைஸ் கொடுங்கள். என் வாழ்க்கையையே மேம்படுத்திக் கொள்ள ஒரே ஒரு அறிவுரை சொல்லுங்கள்' என்று கேட்டுக் கொண்டு இருப்பதால் எந்த லாபமும் இல்லை.

தெலுங்கில் விளையாட்டாகச் சொல்வார்கள்... 'சகல வியாதிகளுக்கும் சாராயமே மருந்து' என்று. தொடர்ந்து சாராயம் குடித்தால், வியாதி என்ன, ஆளே போய்விடுவான் என்பதைத்தான் அப்படிச் சொன்னார்கள் போலும்! அப்படியொரு மருந்தை என்னிடம் எதிர்பார்த்தால், நான் கொடுப்பது விஷமாகத்தான் இருக்கும்.

உயர்ந்தது, தாழ்ந்தது என்ற அளவுகோல்கள் வைத்துக் கொள்ளாமல், அந்தந்த சூழ்நிலைகளுக்குத் தேவையானதைத் திறமையாகச் செய்து முடிப்பதில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது!

யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை. உங்களுக்குப் புரிந்தது அடுத்தவருக்குப் புரியாமல் போகலாம். வேறொருவருக்கு எளிதாக இருப்பது உங்களுக்கு கடினமாகத் தோன்றலாம்.

தன்னம்பிக்கை வேறு. தகுதிக்கு மீறிய நம்பிக்கை வேறு. உங்கள் திறமையை முழுமையாக்கிக் கொள்ளுங்கள். அது போதும்! வரைபடத்தை வைத்துக் கொண்டு வழி தேடுவது போல், கையேடு வைத்துக் கொண்டு வாழ்க்கையைத் தேட முடியாது.