கொடைக்கானல் :
கொடைக்கானலை சுற்றி உள்ள பகுதியில் நிறைய சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கிறது அவற்றை நாம் இங்கே பார்க்கலாம் . இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது நம்முடைய பாதுகாப்பு மிகவும் அவசியம் அதை மனதில் கொண்டு சுற்றுலாவை நல்ல முறையில் சுற்றி பார்த்து விட்டு வரவேண்டும் . சில நேரங்களில் விளையாட்டு விபரிதமாக கூட முடியும் .நம்முடைய பாதுகாப்பை மனதில் கொள்ளவேண்டும் .நான் என்ன சொல்ல வருகிறேன் என்று நண்பர்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைகிறேன்
முதலில் நாம் கொடைக்கானல் பற்றி பார்க்கலாம் !!!
கொடைக்கானல் – மலைகளின் இளவரசி
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு, காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும்.
முன்னர் கொடைக்கானலில் மலைவாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலகங்களில் இங்கு தங்கியிருந்தனர்.
கொடைக்கானலில் பார்க்கவேண்டிய இடங்கள் :
வெள்ளி நீர்வீழ்ச்சி:
கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.
கொடைக்கானல் ஏரி:
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும்.
1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.
இந்த ஏரியின் அருகே மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.
ப்ரயண்ட் பூங்கா:
பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட்.
இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.
150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.
கோக்கர்ஸ் நடைபாதை:
1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம். வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது. இங்கு சில நேரங்களில் உங்கள் நிழலை மேகங்களின் மீது காணமுடியும்(brocken spectre).
டால்பின் மூக்கு:
பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.
இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் liril soap விளம்பரம் எடுக்கப்பட்டது. அதனால் இதனை லிரில் அருவி என்றும் அழைக்கின்றனர்.
பசுமை பள்ளத்தாக்கு (suicide point) :
கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு.
இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.இதில் நிறைய காதல் ஜோடிகள் விழுந்து இறந்ததும் உண்டு
தலையர் நீர்வீழ்ச்சி:
இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது. இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர்.
இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.
குணா குகைகள்:
கமல் ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர்.அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை(Devil’s kitchen) என்றழைக்கப்பட்டது
இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம்.
குறிஞ்சி ஆண்டவர் ஆலயம்
கொடைக்கானல் பூம்பாறை குறிஞ்சி ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது . கொடைக்கானல் செல்லும் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கிய தலங்களில் ஒன்று.
Pine forest:
இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார்.
கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.
பியர் சோழா அருவி(Bear shola Falls):
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது. அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.
Kodaikanal solar observatory:
கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம் 1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும்.
இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார்.
திறந்திருக்கும் நேரம் (Timing)
காலை 10 மணி – மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி – 9 மணி.
சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.
சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.
தூண் பாறைகள்:
இந்த பாறைகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது கூடுதல் தகவல்.
பாம்பர் அருவி:
இந்த அருவிக்கு grand cascade என்ற பெயரும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி.
செண்பகனூர் அருங்காட்சியகம்:
இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு இயங்குகிறது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயங்கும்.
மனிதர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது கொடைக்கானல் சென்று மலையின் இளவரசியை தரிசனம் செய்துவாருங்கள்