Pages

Monday, May 19, 2014

கல்விக் கடன் கொடுக்க கல்லூரிக்கே வரும் வங்கி + கம்ப்ளீட் விளக்கம்!

நம்மில் பெரும்பாலான மாணவர்களின் வரப்பிரசாதமான கல்விக் கடன் திட்டம் அடித்தட்டு மாணவர்களும் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2005-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் அறிவுரையின்படி சுமார் 25 தேசிய மயமாக்கப்பட்டபொதுத்துறை வங்கிகளும், சில தனியார் வங்கிகளும் மாணவர்களுக்கு இது போன்ற கல்விக் கடன் வழங்கி வருகின்றன.இதையடுத்து தங்களது குழந்தைகள் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காக, எப்பாடுபட்டாவது வங்கியில் கல்விக் கடன் பெற்றே தீர வேண்டும் என்று ஆண்டுதோறும் பிளஸ்-2 தேர்வு முடிவுகளுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பெற்றோர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கல்விக் கடன் பெறுவது தொடர்ந்து சிக்கலான நடைமுறையாகவே இருந்து வரும் சூழ்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் நேரிடையாக சென்று வங்கிக் கடன் வழங்கப்படும் என்று கனரா வங்கித் தலைவர் துபே அறிவித்துள்ளார்.இதனிடையே www.eltf.in  என்ற இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களும் உள்ளது. இதையும் தாண்டி கல்விக் கடன் கிடைக்காமல்  கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். அவ்ர்களே தேடிவந்து உதவிகள்  செய்து தருவார்களாக்கும்

இதனிடையே வங்கிக் கடன் விஷயத்தில் பெற்றோர், மாணவர்கள் தரப்பில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு சில முன்னணி வங்கிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்த பதில்கள் வருமாறு:
வங்கிக் கடன் பெற மாணவர்களுக்கான அடிப்படைத் தகுதிகள் ஏதேனும் உள்ளதா?
விண்ணப்பிப்பவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். நல்ல மதிப்பெண்ணுடன் எந்த கல்வி கற்க இருக்கிறாரோ அதற்கான முழு தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.
வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
மாணவரின் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், கல்லூரியில் சேருவதற்கான அட்மிஷன் கார்டு, கல்லூரியின் கட்டண விவரம், மாணவரின் இருப்பிடச் சான்று, அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்று.
கடன் பெறும் மாணவரின் தந்தைக்கு சொத்து ஏதேனும் இருக்க வேண்டுமா வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கடன் பெறத் தகுதியானவர்களா?
கல்விக் கடன் வழங்க மாணவர்களுக்கு எந்தவித நிபந்தனையையும் விதிக்கக் கூடாது என்று நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது. எனவே மாணவரின் பெற்றோருக்கு மாத வருமானம் எவ்வளவு, எவ்வளவு கடன் உள்ளது, அசையும்-அசையா சொத்துகள் என்னென்ன உள்ளது என்பது போன்ற விவரங்கள் அவசியம் இல்லை.வாடகை வீட்டில் வசித்தாலும் கடன் பெறத் தகுதியானவர்கள்தான். ரூ.4 லட்சம் வரை கடன் பெறுபவர்களிடம் எந்த ஆணவங்களையும், உத்தரவாதத்தையும் கேட்கக் கூடாது என்று விதிமுறை உள்ளது.
ஒரு வங்கியின் சேவைக்கு உட்பட்ட பகுதியில் இருப்பவர்கள்தான் அங்கு கடனுக்கு விண்ணப்பிக்க முடியுமா?
ஒரு மாணவருக்கு பொதுத் துறை வங்கிதான் கடன் வழங்க வேண்டும், தனியார் வங்கிதான் வழங்க வேண்டும் என்ற விதிமுறைகள் எதுவுமில்லை. மாணவர்கள் உயர் கல்வியைப் பெறுவதற்கு அலைக்கழிக்கப்படக் கூடாது என்பதற்காக எல்லா வங்கிகளும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு மாணவர் அருகில் உள்ள வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். அங்கு ஒரு வேளை கடன் மறுக்கப்பட்டால் மறுக்கப்படுவதற்கான சான்றைப் பெற்று அருகில் உள்ள மற்றொரு வங்கியில் கொடுத்து கடனைப் பெறலாம்.
கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்பம், சூழ்நிலையால் வெளியூர் செல்ல நேர்ந்தால் எங்கு கடன் பெறுவது?
அவர்கள் தற்போது வசிக்கும் இடத்தின் இருப்பிடச்சான்று இருந்தால் வீட்டின் அருகில் உள்ள வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கு மட்டும்தான் வங்கிக் கடன் கிடைக்குமா?
மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்படிப்புகளுக்கு மட்டுமல்ல, கலை, அறிவியல், டிப்ளமா உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் கடன் பெற முடியும். நர்சரி முதல் பிளஸ்-2 வரை படிப்பதற்கும், குழந்தைகள் கணிப்பொறி வாங்குவதற்கும், ..எஸ்., .பி.எஸ். பயிற்சி பெறுவதற்கும் கூட வங்கிக் கடன் வழங்கப்படும். கல்லூரிப் படிப்பு கடனைப் பொருத்தவரை, மாணவர்கள் சேரும் கல்லூரி, படிக்கும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். அந்தப் படிப்பும் அங்கீகாரம் பெற்ற படிப்பாக இருக்க வேண்டும். சான்றிதழ் படிப்புகளுக்குப் பொதுவாக வங்கிகள் கடன் வழங்குவதில்லை.
ஒரு மாணவனுக்கு அதிகபட்சம் எவ்வளவு கல்விக் கடன் கிடைக்கும்?
பொதுவாக கல்விக் கடனுக்கான உச்சவரம்பு எதுவும் இல்லை. இருப்பினும் உள்நாட்டுப் படிப்புகளுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு ரூ.20 லட்சம் வரையிலும் அதிகபட்சமாக கடன் வழங்கப்படுகிறது. செக்யூரிட்டி, ஜாமீன், அடமானம் எதுவுமின்றி ரூ.4 லட்சம் வரை கடன் பெறலாம். நான்கு லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரையிலான கடனுக்கு 3-ம் நபரின் உத்தரவாதம் தேவைப்படும். அந்த 3-ம் நபர் வருமான வரி செலுத்துபவராக இருக்க வேண்டும். மேலும் விளிம்புத் தொகையும் செலுத்த வேண்டும். ரூ.7.50 லட்சத்துக்கு அதிகமான கடன்களுக்கு விளிம்புத் தொகையுடன் ஏதேனும் சொத்து உத்தரவாதமாக காண்பிக்க வேண்டும்.
ஒரே வீட்டில் இருவருக்கு வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
நிச்சயமாக கிடைக்கும். ஒரே வீட்டில் 2 மாணவர்கள் இருக்கும்போது, ஏற்கெனவே ஒருவர் வங்கிக் கடன் பெற்று படித்துக் கொண்டிருக்கலாம். இந்நிலையில் மற்றொரு மாணவரும் அதே வங்கியில் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு கடன் வழங்கும்போது மேலே குறிப்பிட்டதைப் போல் இருவரின் மொத்த கடனும் ரூ.4 லட்சம் வரை இருந்தால் பிணை எதுவும் தேவையில்லை. அதற்கு அதிகமாக இருந்தால் 3-வது நபரின் உத்தரவாதம், சொத்து உத்தரவாதம், விளிம்புத் தொகை போன்றவை தேவைப்படும்.
கல்லூரிகளில் தனியார் ஒதுக்கீட்டில் இடம் பெறும் மாணவர்களுக்கு கல்விக் கடன்

கிடைக்குமா?
அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில், அங்கீகாரம் பெற்ற படிப்புக்குக் கடன் கிடைக்கும். இருப்பினும் கவுன்சலிங் மூலம் செல்லாதவர்களுக்கு ரூ.4 லட்சத்தை விடக் குறைவான கடனுக்கே சில வங்கிகள் 3-ம் நபரின் உத்தரவாதம் வேண்டும் என்று கேட்கின்றன. பொதுவாக கவுன்சலிங் மூலம் ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு வங்கிக் கடனில் பிரச்னைகள் எதுவும் வருவதில்லை.

கடன் பெறும் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டுமா?
ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் கடனுக்கு விண்ணப்பித்து அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட வங்கியில் மாணவரும் அவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவரும் இணைந்து வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டும்.
கல்லூரியில் பல்வேறு வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. எந்தெந்த தேவைகளுக்கு கல்விக் கடன் வழங்கப்படும்?
கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், டியூஷன் கட்டணம், தேர்வுக் கட்டணம், புத்தகம், சீருடைக் கட்டணம் போன்ற செலவினங்களுக்கான தொகையை கல்விக் கடனில் செலுத்த முடியும். மற்றபடி தனியார் கல்லூரிகளில் கேட்கப்படும் நன்கொடை, கேப்பிடேஷன் ஃபீஸ் போன்றவற்றுக்கு கல்விக் கடன் கிடைக்காது. தேர்வுக் கட்டணம் போன்றவை குறித்து முன்கூட்டியே குறிப்பிடுவது நல்லது.
கல்விக் கடனுக்கு வட்டி எவ்வளவு விதிக்கப்படுகிறது? இதில் சலுகைகள் ஏதேனும் உள்ளனவா?
வட்டியே இல்லாத கல்விக் கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து இன்னும் தெளிவான, அதிகாரப்பூர்வ உத்தரவு வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே அதுவரை கல்விக் கடனுக்கு வட்டி செலுத்தியே ஆக வேண்டும். வங்கிகளின் விதிமுறைகள் ஒரேபோல இருந்தாலும் வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. பொதுவாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்தபட்சம் 12 சதவீதம் முதல் அதிகபட்சம் 14 சதவீதம் வரை கல்விக் கடனுக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது. 12-க்கு குறைவாகவோ, 14-க்கு அதிகமாகவோ எங்கும் வட்டி வசூலிக்கப்படுவதில்லை. மாணவிகளுக்கு வட்டியில் 0.25 சதவீதம் முதல் ஒரு சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
எந்த மாதிரியான வட்டி விகிதம் மாணவர்களுக்கு ஏற்றது?
கல்விக் கடனுக்கான வட்டி வீட்டு கடன்களுக்கான வட்டியைவிடச் சிறிது கூடுதலானது. ஃபிக்சட் வட்டி, ஃபுளோட்டிங் வட்டி என்ற இரண்டு முறைகளில் வட்டி விகிதம் உள்ளது. ஃபிக்சட் வட்டியை நிர்ணயிப்பதில் பல வங்கிகள் குழப்பமான நடைமுறையைக் கொண்டுள்ளன என்பதால் இதில் கவனமாக இருக்க வேண்டும். இரு வட்டி விகிதங்களுக்கும் இடையே சிறிய அளவுதான் வித்தியாசம் என்றால் ஃபிக்சட் வட்டியைத் தேர்வு செய்வதே சிறந்தது. கடன் வாங்கியதில் இருந்தே அசல், வட்டியை செலுத்த வேண்டுமா? படிப்பை முடிக்கும் வரையிலும் அசல் கொடுக்கத் தேவையில்லை. ஆனால் மாணவர்கள் விரும்பினால் வட்டியையும் அசலையும் ஆரம்பத்திலிருந்தே தவணை முறையில் (.எம்..) செலுத்தலாம். ஆனால் வங்கிகள் இதை வற்புறுத்தக் கூடாது. பொதுவாக கொடுத்த கடனைத் திரும்ப வசூலிக்க இரண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் கடன் தொகை பெற்ற மாதத்திலிருந்தே வட்டி செலுத்துவது ஒருமுறை. பணியில் சேர்ந்த பிறகு கடன் தொகையுடன், வட்டித் தொகையையும் சேர்த்து 60 மாதங்கள் முதல் 84 மாதங்கள் வரை மாதாந்திர தவணையில் திரும்பச் செலுத்தும் திட்டம் மற்றொரு முறை. படிக்கும்போதே மாதந்தோறும் .எம்.. செலுத்தினால் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.
படிப்பை முடித்த பிறகு வேலை கிடைக்காவிட்டாலும் கடனைச் செலுத்த வேண்டுமா?
படிப்பை முடித்து குறைந்தபட்சம் ஓராண்டு கழித்து அல்லது வேலை கிடைத்த 6 மாதத்துக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். ஒருவேளை மாணவருக்கு வேலை கிடைக்காவிட்டால், அது தொடர்பான விவரத்தை சம்பந்தப்பட்ட வங்கியில் தெரிவித்தால் கடனைத் திருப்பிச் செலுத்த மேலும் கால அவகாசம் வழங்கப்படும்.
எந்த வகை சூழ்நிலைகளில் ஒருவருக்கு வங்கிக் கடன் மறுக்கப்படலாம்?
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் தந்தையோ, பெற்றோரில் ஒருவரோ அந்த வங்கியில் ஏற்கெனவே கடன் பெற்று அதை சரிவர திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் (தவணை கடந்த பாக்கி) கடன் மறுக்கப்படவாய்ப்பு அதிகம். மேலும் மாணவரின் குடும்பத்தில் ஏற்கெனவே ஒருவர் கல்விக் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலோ, குடும்ப உறுப்பினர் யாரேனும் வங்கியில் பெற்ற பிற வகைக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலோ வங்கிக் கடன் மறுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
இளநிலைக் படிப்பை வங்கிக் கடனில் முடிக்கும் ஒருவர் முதுநிலைப் படிப்பைத் தொடர மீண்டும் வங்கிக் கடன் கிடைக்குமா?
நிச்சயம் கிடைக்கும். உதாரணமாக ஒரு மாணவர் கல்விக் கடன் பெற்று மெக்கானிகல் பட்டயப் படிப்பை முடித்த நிலையில், பி.. பட்டப் படிப்பில் சேர நினைத்தால். அதற்காக மீண்டும் கல்விக் கடன் பெறலாம். இதே போல் பி.எஸ்சி. முடித்தவர் எம்.எஸ்சி.க்கும், பி.. முடித்தவர் எம்..க்கும் கல்விக் கடன் பெற முடியும்.
கல்விக் கடனுக்காக வங்கியை அணுகும்போது, எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு கடன் வழங்கிவிட்டோம். எனவே வேறு வங்கியை அணுகுங்கள் என்று சில வங்கிகள் கூறுகின்றனவே?
அப்படிக் கூற முடியாது. இந்த ஆண்டு 50 பேருக்குதான் கொடுப்போம், 100 பேருக்குதான் கொடுப்போம் என்று வங்கிகள் கூறித் தட்டிக் கழித்துவிட முடியாது. எவ்வளவு பேர் வந்தாலும் தகுதியுள்ளவர்களுக்குக் கடன் கொடுத்தே ஆக வேண்டும். சேலம் மாவட்டம் கொளத்தூரில் இந்தியன் வங்கி சார்பில் ஒரே கிராமத்தில் சுமார் 1,500 மாணவ-மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. சிலர் வேறு வங்கியில் கணக்கு வைத்திருக்கக்கூடும். அந்த வங்கியில் கல்விக் கடன் கொடுக்க மறுத்தால், அவர்களிடம் ஒப்புதல் கடிதத்தைப் பெற்று, எந்த வங்கியில் கல்விக் கடன் பெற வேண்டுமோ அந்த வங்கிக்கு விண்ணப்பிக்கலாம். வங்கிக் கடன் விஷயத்தில் இடைத்தரகர்களை நம்பாமல், பெற்றோரே வங்கியை நேரடியாக அணுகுவது நல்லது. சில வங்கிகள் கல்விக் கடன் வழங்காமல் தட்டிக் கழிப்பதால்தான் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு கிராமம், வார்டு வீதம் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது.
சரியாக படிக்காத மாணவ-மாணவிகளுக்கு கல்விக் கடன் திடீரென நிறுத்தப்பட்டு விடுவதாக கூறப்படுகிறதே?
சில வங்கிகள் ஒவ்வொரு பருவத்திலும் (செமஸ்டர்) மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழைக் கேட்டுப் பெறுகின்றனர். மாணவர்கள் ஒரு செமஸ்டரில் தோல்வி அடைந்திருந்தாலும் அடுத்த செமஸ்டருக்கான கட்டணத்தைக் கொடுப்பதில்லை. மாணவர்கள் நன்கு படித்து வேலையில் சேர்ந்து கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
வங்கிக் கடன் தொடர்பான புகார்களை யாரிடம் தெரிவிப்பது?
தகுதி இருந்தும் கடன் வழங்க மறுப்பது, படிப்பு காலம் முடியும் முன்னரே கடனைத் திரும்பச் செலுத்துமாறு நிர்பந்திப்பது போன்ற வங்கி சங்க விதிகளை மீறும் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கியில் புகார் தெரிவிக்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட வங்கியின் மண்டல மேலாளர் அலுவலகத்திலும், வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் புகார் தெரிவிக்கலாம். இந்தியன் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்கும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளன. ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக எஜுகேஷன் லோன் டாஸ்க் ஃபோர்ஸ் உள்ளிட்ட அமைப்புகளும் இயங்கி வருகின்றன.மேலும்  www.eltf.in  என்ற இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களும் உள்ளது. இதையும் தாண்டி கல்விக் கடன் கிடைக்காமல்  கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். அவ்ர்களே தேடிவந்து உதவிகள்  செய்து தருவார்கள்
கல்விக்கடன் கிடைக்கவில்லையா? ஆம்புட்ஸ்மேனை தொடர்பு கொள்ளுங்கள்...
ஒரு மாணவர் கல்விக்கடன் வாங்க, வங்கியை அணுகி ஒரு மாததுக்குள் சரியான பதிலை வங்கிகள் தராவிடில் மாணவர்கள் பேங்கிங் ஆம்புட்ஸ்மேனை தொடர்கொள்ளலாம்www.bamkingombudsmanrbi.org.in அல்லது 044-25399170, 25395964, 25399158. என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
இதேபோல் தனியார் துறை நிறுவனமான வாய்ஸ் ஆப் இந்தியாவும் கல்விக்கடன் கிடைக்காதவர்களுக்கு உதவி செய்து வருகிறது. இந்த சேவை நிறுவனத்தை தொடர்பு கொள்ள 9994658672 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment