Pages

Friday, May 2, 2014

தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

அட்சயதிருதியை அன்று ஒரு கிராம் நகையாவது வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள் நம்மவர்கள். அப்படி  நகை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டியவை என்னென்ன என்று இதோ:
1. ஹால்மார்க் நகைகள்!
நீங்கள் வாங்கும் நகைகள் ஹால் மார்க் முத்திரை கொண்ட நகைகளா என்று பார்த்து வாங்குவது அவசியம். நம்பர் 1 நகை, தரம் நிறைந்தது என விளம்பரத்தில் சொல்லப்பட்டாலும் ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகள் தான் தரமானவை. அதிலும் ஐந்து முத்திரை (முக்கோண சிம்பல், 916, டெஸ்ட் செய்த லேப், வருடம், கடை எண்) உள்ள ஹால்மார்க் நகைகளே தரமானவை. இதை பலரும் கவனிக்காமல் மூன்று முத்திரை கொண்ட ஹால்மார்க் நகைகளை வாங்கிவிடுகின்றனர். மேலும், வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை உண்டு.
2.கல் நகைகள்!
தங்க நகைகளை வாங்கும்போது கல் வைத்த நகைகளை வாங்கு கிறீர்கள் எனில், அவை எத்தனை கிராம் உள்ளன, அதற்கான விலை எவ்வளவு, மொத்த விலையில் கற்கள் போக தங்கத்தின் விலை சரியாக உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். பிற்காலத்தில் அந்த நகைகளை தந்து புது நகை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ கல் நகைகளுக்கு மதிப்பு குறைத்தே கணக்கிடப்படும். ஆகவே, கல் நகைகளை வாங்கும்போது கவனத்தோடு இருக்கவேண்டியது அவசியம்.
3. டிசைன்!
சிலர் நகை வாங்கவேண்டும் என்றதுமே நல்ல டிசைனாக இருக்க வேண்டும் என்று நினைக்க தொடங்கிவிடுவார்கள். அப்படி டிசைன் நகைகளை வாங்கும்போது அதற்கு சேதாரம் அதிகமாகும், அப்போது அதற்கான சேதாரம் எவ்வளவு, அது நகையின் டிசைனுக்கு தகுந்த சேதாரம்தானா என்று பார்த்து அதற்குபின் வாங்குங்கள். பார்க்க நன்றாக உள்ளது என நீங்கள் வாங்கும் சிறிய அளவிலான நகைகளின் ஆயுள் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். மேலும், நீங்கள் ஏதாவது ஒரு நகையை அட்சயதிருதியை அன்று வாங்க வேண்டுமே என்ற காரணத்துக்காக 2 கிராமுக்கு கீழ் நகை வாங்கும்போது தரம் குறைந்த நகைகளை வாங்கும் வாய்ப்பு அதிகம். அதனால், நகை வாங்கும்போது இரண்டு கிராமுக்கு மேல் உள்ள நகையாகப் பார்த்து வாங்குவது நல்லது.
4.தரம்!
நகை வாங்கும்போது சரியான தரத்தில் நகைகளை வாங்குவது முக்கியம். அதோடு ஒவ்வொரு நகை வாங்கும்போதும் அதற்கு என்ன தரக் குறியீடு எனப் பார்த்து வாங்க வேண்டும். தங்கம் என்றால் 916 நகைகள், வைர நகைகள் வாங்கும்போது தரச் சான்றிதழ் பார்த்து வாங்கவேண்டும். குறிப்பாக, வைரம் வாங்கும்போது கட்டாயம் தரச் சான்றிதழை கேட்டு பெற வேண்டும்.
5.சேதாரம்!
சேதாரம் என்கிற விஷயம் கடைக்கு கடை மாறுபடும். நீங்கள் எந்த நகை வாங்குவதாக இருந்தாலும் சேதாரம் எவ்வளவு என்பதை நன்கு விசாரித்து அறிந்தபிறகே வாங்குங்கள். இதில் குழப்பமான பல கணக்குகள் இருப்பதால், உஷாராக இருப்பது அவசியம்!

அட்சயதிருதியை அன்று தங்க நகை வாங்க நினைப்பவர்கள் இந்த விஷயங்கள் அனைத்தையும் கவனத்தில் கொள்ளலாமே!

No comments:

Post a Comment