Pages

Wednesday, March 19, 2014

வெயிலை சமாளிக்க ரெடியாகுங்க?

அழகின் முதல் எதிரி வெயில்! சருமம், கூந்தல் என உச்சி முதல் பாதம் வரை அழகையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கற வெயிலை எப்படித்தான் எதிர் கொள்வது? வெயிலை பழிப்பதை தவிருங்கள். தினமும் அரை மணி நேரத்தை உங்களுக்காக ஒதுக்கினால், வெயிலின் விபரீத விளையாட்டுகளில் இருந்து உங்கள் அழகையும், ஆரோக்கியத்தையும் மீட்க முடியும். கோடையில் அழகை பராமரிக்க வழிகயை பார்க்கலாம்.....


சருமத்துக்கு...

லேசான வெயில் பட்டாலே சருமம் கருத்துப் போவதும், பிசுபிசுப்பாக எண்ணெய் வடிவதும் கோடையில் தவிர்க்க முடியாதது. இதை தவிர்க்க மிதமான ஆயில் ஃப்ரீபேஸ் வாஸ் கொண்டு, அடிக்கடி முகம் கழுவலாம். இது அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும். வெள்ளரிக்காய் சாறும், தேங்காய் பாலும் சம அளவு எடுத்து கலக்கவும். அதில் பஞ்சை நனைத்து, முகம் முழுக்க ஒற்றியெடுத்து பத்து நிமிடங்கள் ஊறி கழுவலாம். இது சருமத்தை இயற்கையாக வெளுவெளுப்பாக்கும். வெள்ளரிச்சாறு கலவையை நிறைய தயாரித்து ப்ரிட்ஜில் வைத்து அடிக்கடி உபயோகிக்கலாம். குறிப்பாக வெயிலில் அலைந்து விட்டு வந்ததும் தடவினால் கருமை நீங்கும். தக்காளியை தோல் நீக்கி சதைப்பகுதியை எடுத்து அத்துடன் தயிர் கலந்து முகம், கழுத்து பகுதியில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம். வெளியூருக்கு சுற்றுலா சென்று விட்டு வந்ததும் கருத்து போன சருமத்தை இயல்பாக மாற்ற முடியும்.


பப்பாளிக்கூழுடன், வாழைப்பழத்தையும் மசித்து முகத்தில் தடவி ஊறிக்கழுவினால் இறந்த செல்கள் அகன்று முகம் பளபளக்கும். ஆரஞ்சுபழச் சாறுடன், தேன் கலந்து சருமத்தில் தடவினால், கருத்த சருமம் மெல்ல, மெல்ல நிறம் மாறும். சுத்தமான சந்தனத்தில் பன்னீர் கலந்து முகம், கழுத்து பகுதிகளில் தடவி சிறிது நேரம் ஊறிக் கழுவினால் கருத்த சருமம் மாறுவதுடன், குளுமையாகவும் இருக்கும். முல்தானி மெட்டியில், பன்னீர் கலந்து சருமத்தில் தடவினாலும் எண்ணெய் பசை கட்டுப்படும். வெயிலினால் உண்டாகும் சரும எரிச்சல் அடங்கும். கடைகளில் கற்றாலை ஜெல் கிடைக்கிறது. அதில் முல்தானிமிட்டி கலந்து சருமத்தில் தடவினால் கருமை நீங்கி பழைய நிறம் திரும்பும்.


பொதுவாக குளிர் காலத்தில் வெந்நீரில் குளிப்பதும், வெயில் காலத்தில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதும் நம் வாழக்கம். ஆனால் அதை தவிர்த்து லேசான வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதன் மூலம் சருமம் வறட்சியடையாமல் இருக்கும். உள்ளே சாப்பிடுகிற உணவுகளும் சருமத்திலும், கூந்தலிலும் தன் பிரதிபலிப்பை காட்டும். எனவே அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கவும். லைட்டான உணவுகளே வெயில் காலத்துக்கு ஏற்றவை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பழங்கள் எடுத்துக்கொள்ளவும். பச்சை காய்கறிகளும் சருமத்துக்கு நல்லது. 3லிட்டர் தண்ணீர் குடிப்பதுடன் இடையிடையே இளநீர், நீர்மோர், ஏதேனும் ஜீஸ் எடுத்துக் கொள்ளலாம்.


முடிந்த வரை காலை 10 முதல் 3மணி வரை வெயிலில் அதிகம் அலைவதைத் தவிர்க்கவும். அப்படியே தவிர்க்க முடியாத பட்சத்தில் சருமத்துக்கு சன் ஸ்கீரின், கைகளுக்கு கிளவுஸ், தலைக்கு தொப்பி, கண்களுக்கு கூலிங் கிளாஸ் அணிவது பாதுகாப்பானது. யுவி கதிர்களின் பாதிப்பிலிருந்து கண்ணை பாதுகாப்பது அவசியம். இல்லாவிட்டால் கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சுருக்கங்கள் விழலாம். சன் ஸ்கீரினை எப்போதும் வெளியில் கிளம்புவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக தடவவும். வெயில் காலத்தில் மேக்கப் தவிர்ப்பது நல்லது. அவசியம் மேக்கப் போட்டே ஆக வேண்டும் என்பவர்கள் வாட்டர் பேஸ்டு பவுண்டேஷன் அல்லது காம்பேக்ட் மட்டும் உபயோகிக்கலாம். மிக லைட்டான ஷேடுகளில் லிப்ஸ்டிக் போடவும். கண்களுக்கு அதிக மேக்கப் வேண்டாம்.

No comments:

Post a Comment