Pages

Friday, December 5, 2014

கேஸ் சிலிண்டர் மானியம் வாங்க அப்ளை செஞ்சாச்சா?

சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது பற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது,”சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.
மானியத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அவர்கள் முழு தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன்மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும். எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை வந்து சேர்ந்துவிடும். எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் முறை எளிதானதுதான். யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும். தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம்-2 ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். படிவம்-1-ஐ வங்கியிலும், படிவம்-2-ஐ முகவரிடமும் வழங்கவேண்டும்.
ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டி முகவரிடம் இருந்து படிவம்-3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் படிவம்-3-ஐ வங்கியிலும், படிவம்-4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும். வங்கியில் படிவம் செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
என்று அவர்கள் தெரிவித்தனர்.

Tuesday, November 11, 2014

காலை உணவை தவிர்க்கக் கூடாது...ஏன்?

நாம் அதிகமாகத் தவிர்க்கும் உணவு காலை உணவு. உண்மையில், அறவே தவிர்க்கக் கூடாததும் காலை உணவுதான். ஏன் என்பதற்கு உணவியல்  நிபுணர் 5 காரணங்களைப் பட்டியலிடுகிறார்.

ஏனெனில், காலை உணவு என்பது விரதத்தை முடிப்பது...

பிரேக்ஃபாஸ்ட் என்ற வார்த்தையைக் கவனியுங்கள். பிரேக்கிங் தி ஃபாஸ்ட்என்பதுதான் அதன் அர்த்தம். முதல்நாள் இரவு 9 மணிக்கு
  சாப்பிட்டிருந்தால் அடுத்த நாள் காலை9 மணிக்கு காலை உணவு சாப்பிடுகிறோம். இடையில் 12 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். இது  கிட்டத்தட்ட விரதம் இருப்பது போலத்தான். நாம் தூங்கினாலும், நம் ஆரோக்கியத்துக்காக உடல் உறுப்புகள் உழைத்துக் கொண்டேதான் இருக்கின்றன.  அவற்றுக்கு அடுத்த நாளின் தொடக்கத்திலாவது சக்திக்கான உணவு வேண்டும். காலையிலும் சாப்பிடாமல் விட்டுவிட்டால் மதியம் ஒரு மணி வரை  இந்த விரதம் நீடிக்கும். பிறகு, ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உடல் உறுப்புகளுக்கு எப்படி சக்தி கிடைக்கும்? நீங்கள் எப்படி  ஆரோக்கியமானவராக இருக்க முடியும்? எனவே, விரதத்தை முடியுங்கள்... காலையில்!

ஏனெனில், காலை உணவு என்பது எரிபொருள் நிரப்புவது...

நாள் ஒன்றுக்கு 1500 முதல் 1800 கலோரி வரை நம் உடலுக்கு சக்தி தேவை. இதில் மூன்றில் ஒரு பங்கு கலோரிகள் காலை உணவிலிருந்தே  உங்களுக்குக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் நாள் முழுவதும் நீங்கள் எனர்ஜியுடன் செயல்படுவதற்கு உங்கள் உடல் உங்களுக்கு உதவி செய்யும்.  அதனால், எரிபொருளை நிரப்புங்கள்! 

ஏனெனில், காலை உணவு என்பது நோய்களை விரட்டுவது... 

காலை உணவைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்று பசியின்மை. 9 மணிக்கு வெளியில் கிளம்புகிறவர்களாக இருந்தால் 8 மணிக்குள் குளித்துத்  தயாராகிவிடுங்கள். குளித்தவுடன் இயல்பாகவே பசியெடுக்க ஆரம்பித்துவிடும். உங்களுக்கு காலை உணவு உண்பதற்கு நேரமும் கிடைக்கும்.  இல்லாவிட்டால், 11 மணிக்கு பசி அதிகமாகும். காலை உணவும் சாப்பிட முடியாமல், மதிய உணவும் சாப்பிட முடியாமல் ஆரோக்கியமற்ற  நொறுக்குத்தீனிகளையும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும் சாப்பிட வேண்டியிருக்கும். ஏற்கெனவே உணவைத் தவிர்த்திருப்பதால்  உடல் சோர்வு, மூளையில் மந்தத் தன்மை, பருமன், சர்க்கரை அளவு ரத்தத்தில் ஏறி இறங்குவது, ரத்தசோகை போன்ற பிரச்னைகள் அதிகமாகும்.  தவிர உப்பு, கொழுப்பு, இனிப்பு அதிகம் நிறைந்த நொறுக்குத்தீனிகளால்ரத்தக் கொதிப்பு ஏற்படுவது, காலைப் பசியின் காரணமாக மதியம் அதிகமாக  சாப்பிட நேர்வது, பட்டினியின் காரணமாக வயிற்றில் அமிலம் அதிகமாக சுரப்பது, அமிலம் அதிகம் சுரப்பதால் அல்சர் குறைபாடு இருந்தால் இன்னும்  அதிகமாவது போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். ஆகவே, நோய்களை விரட்டுங்கள்.

ஏனெனில், காலை உணவு என்பது புத்துணர்வைத் தருவது...

காலை உணவின் மகத்துவங்களில் ஒன்று உடல் சோர்வு மற்றும் மனச்சோர்விடம் இருந்து நம்மைத் தற்காப்பது. நம் உடலுக்குத் தொடர்ச்சியாக  தேவைப்படுகிற குளுக்கோஸ்தான் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், குறிப்பாக நம் மூளையின் செயல்திறனுக்கும் அதிகம் தேவைப்படுகிறது.  இது காலை உணவின் மூலமே அதிகம் கிடைக்கிறது. இதன்மூலம் மூளையில் இருக்கும் நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள் சிறப்பாகச் செயல்பட்டு,  நினைவுத்திறனை அதிகப் படுத்தி, உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு காலை உணவு மிகமிக  அவசியம். அவசரமாக, ஏதாவது ஒன்றை டிபன் பாக்ஸில் அடைத்துத் தந்தால் பள்ளியில் மந்தமாகவே இருப்பார்கள். படிப்பதிலும் பின்தங்குவார்கள்.  காலை உணவைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு நீரிழிவு தாக்கும் அபாயம் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே,  ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஏனெனில், காலை உணவு என்பது உங்களை ராஜாவாக மாற்றுவது...

காலையில் ராஜா மாதிரி சாப்பிட வேண்டும், மதியம் மந்திரி மாதிரி சாப்பிட வேண்டும், இரவில் சிப்பாய் மாதிரி சாப்பிட வேண்டும்என்று  கேள்விப்பட்டிருப்பீர்கள். காலை உணவின் முக்கியத்துவத்தைமருத்துவரீதியாக உணர்ந்து சொல்லப்பட்ட பொன்மொழி இது. ராஜா மாதிரி என்றால்  அதிகம் சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதம் என எல்லாம் கலந்த சரிவிகித உணவாக சாப்பிட வேண்டும் என்பதே  இதன் அர்த்தம். நான்கு இட்லி சாப்பிட்டாலே உங்களுக்குத் தேவையான சரிவிகித உணவு காலையில்கிடைத்துவிடும். இட்லியில் மாவுச்சத்தும்,  சாம்பாரில் காய்கறிகளும் பருப்பும் இருப்பதால் நார்ச்சத்தும் புரதமும் கிடைத்து விடும். ஆகவே, ராஜாவாகி விடுங்கள்!

காலை உணவுக்கு எது பெஸ்ட்?
  • காலை உணவு 7 மணியிலிருந்து 9.30 மணிக்குள் சாப்பிடுவது நல்லது.
  • தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை, ஆப்பம், பொங்கல், உப்புமா, இடியாப்பம் போன்றவற்றில் ஏதாவது ஒரு உணவை சாம்பார், சட்னியுடன் சாப்பிடலாம். சாதம் சாப்பிடுவதோ, பழைய சாதம் சாப்பிடுவதோ தவறில்லை. ஆனால், வீணாகிவிடக் கூடாது என்று அதிகமாக  சாப்பிட வேண்டாம்.
  • சப்பாத்தி, கார்ன்ஃப்ளேக்ஸ், ஓட்ஸ், பிரெட், சாண்ட்விச் போன்ற கான்டினென்டல் உணவுகளும் காலைக்கு ஏற்றவையே. சிப்ஸ், பப்ஸ் போன்ற ஜங்க்   உணவுகள், இனிப்புகள் கட்டாயம் கூடாது. சிலர், காலை உணவாக பழங்கள் மட்டுமே சாப்பிடு வார்கள். பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான்... ஆனால்,  அதிலிருந்து நார்ச்சத்து மட்டுமே கிடைக்கும். மாவுச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற சரிவிகித சத்துகள் கிடைத்தால்தானே நல்ல  உணவு. எனவே, பழங்களை மட்டும் சாப்பிடுவதும் தவறுதான்!

Thursday, October 30, 2014

104க்கு போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும்....

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய திட்டம் பிளட் ஆன் 104. அதாவது 104 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும். ஒரு பாட்டில் ரூ. 450 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து செல்வாக கூடுதலாக ரூ. 100 தர வேண்டும். இந்தத் திட்டம் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது. திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜீவன் அம்ருத் சேவா என்றும் இதற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ரத்த வங்கி கால் சென்டர்

இந்த ரத்த வங்கிக்காக, தனியாக அனைத்து மாநிலங்களிலும் கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் எண்தான் 104 ஆகும்.

மருத்துவமனைகளில்

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் இந்த 104 கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.

ரத்தம் கோரி கால் செய்யலாம்

இந்த கால் சென்டர்களுக்குப் போன் செய்து தேவையான ரத்தம் குறித்த தகவலைக் குறிப்பிட்டால், உடனடியாக அருகில் உள்ள ரத்த வங்கிகளுக்கு இந்த கால் சென்டரிலிருந்து தொடர்பு கொண்டு, குறித்த முகவரிக்கு ரத்தம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வார்கள்

24 மணி நேர சேவை                     

இது ஒரு 24 மணி நேர சேவையாகும். இந்த சேவையை 40 கிலோமீட்டருக்குள் இருப்பவர்கள் பயன்படுத்த முடியும். தகவல் தெரிவித்தவுடன் அடுத்த ஒரு மணி நேரத்தில் ரத்தம் நம்மைத் தேடி வந்து விடும்.
ஒரு பாட்டில் ரத்தத்திற்கு ரூ. 450 வசூலிக்கப்படும். கூடுதலாக போக்குவரத்து செலவாக ரூ. 100 தர வேண்டும்.

Thursday, October 16, 2014

உணவும் உறுப்பும்

கேரட் கண்ணுக்கு நல்லது... ஆப்பிள் பல்லுக்கு நல்லது... இப்படிஒவ்வொரு உணவையும் அதன் அருமை பெருமைகளை விளக்கிச்சொன்னாலுமே சிலரை சாப்பிட வைக்க முடியாது. உண்கிற உணவுக்கும்உடலின் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகக் கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று... இதுவரை தொடாத உணவுகளைக் கூடத் தேடிப் பிடித்து உண்ணச் சொல்கின்றன அந்தத் தகவல்கள்!

*கேரட்

கேரட்டை குறுக்கே நறுக்கினால் கண் போன்றே காட்சியளிக்கும். தினமும் கேரட்டை உணவில் சேர்த்துக்கொண்டால் தெளிவான பார்வையைப் பெறலாம். கேரட்டில் உள்ள பீட்டாகரோட்டின், 

கேட்டராக்ட் எனப்படும் கண்புரை நோயை வரவிடாமல் செய்கிறது. இந்த வேதிப்பொருள் 60 வயதுக்கு மேலே வரும் பார்வைக் குறைபாட்டினையும் தடுக்கிறது. கேரட் சாப்பிடும் போது இயற்கையாக கிடைக்கும் பீட்டாகரோட்டினின் வீரியம் மாத்திரையாகச் சாப்பிடும் போது கிடைப்பதில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

*வால்நட்

பார்ப்பதற்கு மனித மூளையைப் போலவே காட்சியளிக்கும் வால்நட் சாப்பிடுவதால் மூளைக்கு பலவித நன்மைகள் கிடைக்கின்றன. பருப்பு வகைகளில் வால்நட்டில் மட்டுமே ஒமேகா-3 எனும் கொழுப்பு அமிலம் உள்ளது. 

இது டிமென்ஷியா என்னும் மறதி நோய் வராமல் தடுக்கிறது. அல்ஸீமர் நோய் வருவதற்கான மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களையும் தடை செய்கிறதாம் வால்நட். எலிகளுக்கு வால்நட் சாப்பிடக் கொடுத்து ஆராய்ச்சி செய்தபோது, மூளைக்குக் கட்டளை அனுப்பும் செல்கள் நன்றாக இயங்கியதை கண்டறிந்தனர்.

*தக்காளி

தக்காளியை நறுக்கினால் அதில் இதயம் போலவே 4 அறைகள் இருக்கும். தக்காளியில் இருக்கும் லைக்கோபேன் எனும் வேதிப்பொருள் இதய நோய்களையும் புற்றுநோய்களையும் வரவிடாமல் செய்கிறது. அமெரிக்காவில் பெண் நலம் குறித்து 40 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு செய்ததில், ரத்தத்தில் லைக்கோபேன் அதிகம் இருந்தவர்களுக்கு இதய நோய்கள் எதுவும் இல்லை... 

லைக்கோபேன் ரத்தத்தில் குறைவாக இருந்த பெண்களுக்கு மட்டுமே இதய நோயின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தன. இந்த லைக்கோபேன் எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்பை ஒழித்து, இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களைக் காக்கும் வேலையையும் செய்கிறது.

*காளான்

மனித காதுகள் போலவே தோற்றமளிக்கும் காளானை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கேட்கும் திறன் அதிகரிக்கும். வைட்டமின் டி சத்து கிடைக்கும் ஒரு சில உணவுப் பொருட்களில் காளான் முக்கியமானது. வைட்டமின் டி எலும்புகளுக்கு இன்றியமையாதது. காதுகளில் உள்ள குருத்தெலும்பே உடலில் உள்ள மிகச் சிறிய எலும்பாகும். இதுதான் மூளைக்கு ஒலியைக் கடத்தி தெரியப்படுத்துகிறது. இதனை வலுப்படுத்த காளான் உதவுகிறது.

*பிராக்கோலி

உற்றுப் பார்த்தால் கேன்சர் செல்கள் போலவே காட்சியளிக்கும் பிராக்கோலி. ஆனால், இது கேன்சருக்கு எதிராகச் செயல்படுகிறது. அமெரிக்காவில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில், நோயாளிகளுக்கு நிறையபிராக்கோலி  சாப்பிட வைத்துப் பார்த்ததில் ப்ரோஸ்டேட் கேன்சரின் தீவிரம் 45 சதவிகிதம் குறைந்து இருந்ததாம்.

*இஞ்சி

இஞ்சியின் மருத்துவ குணம் உலகம் அறிந்ததே. சீனாவில் மலம் கழிக்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு இஞ்சியை கொடுத்துதான் குணப்படுத்துகிறார்கள். கட்டிகள் உள்பட குடலில் பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாக்கும் அருமருந்து இஞ்சி. 

*திராட்சை

பார்க்க குலைகுலையாக மனிதனின் நுரையீரல் போலவே காட்சியளிக்கும் திராட்சைகள் உண்மையில் நுரையீரலுக்கு பல நன்மைகளை செய்கின்றன. தினமும் திராட்சையை எடுத்துக்கொண்டால் நுரையீரல் புற்றுநோயும் எம்பைஸீமா என்னும் சுவாச நோயும் வராமல் தடுக்கும். திராட்சை விதைகளில் இருக்கும் புரோஅந்தோசையனடின் எனும் வேதிப்பொருள், ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமாவை குறைக்கும் தன்மை கொண்டது.

* வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இருக்கும் டைப்போபேன் என்னும் வேதிப்பொருள் உணவு செரித்த பின் செரோடனினாக மாறுகிறது. மன நிலையை வடிவமைப்பதில் செரோடனின் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மூளையில் அதிகமாக சுரந்தால் மனம் உற்சாகத்தில் துள்ளும்.

*அவகேடோ (பட்டர் ஃப்ரூட்)

அவகேடோ பழத்தை குறுக்கே வெட்டிப் பார்த்தால் குழந்தை தாயின் வயிற்றில் தொப்புள்கொடியுடன் அமர்ந்து இருப்பது போல இருக்கும். அவகேடோ என்று அழைக்கப்படும்பட்டர் ஃப்ரூட்’, கருவுறுதலுக்குத் தேவையான பலத்தை அளிக்கிறது. வைட்டமின் சத்து அதிக அளவில் இருப்பதால் பெண்களின் ஹார்மோன் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவுகிறது. குழந்தை சரியான எடையில் பிறக்கவும் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது. 

*சீஸ்

சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டியில் கால்சியம் நிறைய உள்ளது. எலும்புகளின் உறுதித் தன்மைக்குப் பெரிதும் பயன்படுகிறது. இதில் கிடைக்கும் பாஸ்பேட் எலும்புகளின் வளர்ச்சிக்கும் தசைகளை உறுதிப்படுத்தவும்  உதவுகிறது.

கேரட் சாப்பிடும் போது இயற்கையாக கிடைக்கும் பீட்டா கரோட்டினின் வீரியம் மாத்திரையாகச் சாப்பிடும் போது கிடைப்பதில்லை.பட்டர் ஃப்ரூட் கருவுறுதலுக்குத் தேவையான பலத்தை அளிக்கிறது. வைட்டமின் சத்து அதிக அளவில் இருப்பதால் பெண்களின் ஹார்மோன் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவுகிறது. குழந்தை சரியான எடையில் பிறக்கவும் கர்ப்பப்பை புற்றுநோய் வாராமல் தடுக்கவும் உதவுகிறது