Pages

Sunday, September 15, 2013

நேர்முகத் தேர்வின்போது பின்பற்ற வேண்டியவை....

வேலை வாய்ப்பை தேடும் பலருக்கு, நல்ல கல்வித்தகுதியுடன் கூடிய பல திறமைகள் இருந்தபோதிலும், அவர்களில் கணிசமானோருக்கு, நேர்முகத் தேர்வுகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை. இதனால், தங்களுக்கான சிறந்த வாய்ப்புகளை அவர்கள் இழக்கிறார்கள். எனவே, இக்கட்டுரை அவர்களுக்கான விஷயங்களை பேசுகிறது.
உட்கார வேண்டும்
நேர்முகத் தேர்வுக்கு நீங்கள் கலந்துகொள்கையில், உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கையில், நேர்முகத் தேர்வு கமிட்டி, அமரச் சொன்னால், அமர்ந்துவிட வேண்டும். அதுதான் முறை. ஆனால், அதிக பணிவானவர் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இல்லை, இல்லை நான் நிற்கிறேன் என்று சொல்லக்கூடாது. சிலர், ஆர்வக்கோளாறால் அப்படித்தான் செய்கிறார்கள்.
ஆனால், அவ்வாறு செய்வது, உங்களின் மதிப்பை உயர்த்துவதற்கு பதிலாக, இறக்கிவிடும். இதனால், சம்பந்தப்பட்ட நேர்முகத் தேர்வாளர்கள், கோபமாகிவிடவும் வாய்ப்புண்டு. அப்படி அவர்களின் மனதில் கோபம் தோன்றிவிட்டால், நீங்கள் அந்த கணமே நிராகரிக்கப்பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம். நீங்கள் உட்காரவில்லை என்றால் நேர்முகத்தேர்வே நடக்காது என்று அவர்கள் கூறுவார்கள். இது நீங்கள் நிராகரிக்கப்ட்டதற்கான ஒரு அடையாளம்.
உங்களின் சுய மரியாதையை எப்போதுமே குறைத்துக் கொள்ளக்கூடாது. சேரில் உட்காரும்போது, நன்றாக பின்னால் நகர்ந்து உட்கார வேண்டும். அதேசமயம், சாய்ந்துகொள்ளக்கூடாது. சிறிது முன்னால் நகர்ந்து அமர வேண்டுமெனில், சேரை சத்தம் வரும் வகையில் நகர்த்தக்கூடாது. மிகவும் மெதுவாக, நயமாக நகர்த்தி அமர வேண்டும்.
வணக்கம் சொல்லுதல்
நேர்முகத் தேர்வு அறைக்குள் நீங்கள் நுழையும்போது, அங்கே அமர்ந்திருக்கும் நபர்களுக்கு, தேவையான சத்தத்தில், குட்மார்னிங் சார்ஸ் என்று சொல்ல வேண்டும். முகத்தை இயந்திரத்தனமாக வைத்துக்கொண்டு சொல்லாமல், சற்று புன்முறுவலுடன் அதை தெரிவிக்க வேண்டும். அதே சமயத்தில், அந்த கமிட்டியில் பெண்களும் இருந்தால், குட்மார்னிங் சார்ஸ் அன்ட் மேடம் என்று சொல்ல வேண்டும்.
இதன்மூலம், உங்களின் மீதான அபிப்ராயம் ஆரம்பத்திலேயே உயரும். மேலும், சிலருக்கு நேர்முகத்தேர்வின் நேரம் இரவு 8 அல்லது 9 மணிக்குகூட அமையலாம். எனவே, அந்த சமயத்தில், உள்ளே நுழைகையில், குட் நைட் என்று சொல்லக்கூடாது. சிலர் இந்தத் தவறை செய்கிறார்கள். எனவே, அந்த நேரத்தில், குட் ஈவ்னிங் என்ற வார்த்தையையே பயன்படுத்த வேண்டும்.
அமரும் முறை
நேர்முகத் தேர்வின் போது எப்படி அமர வேண்டும் என்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமான விஷயம். நாற்காலியின் நுனியிலோ அல்லது நன்கு சாய்வாகவோ அமரக்கூடாது. உங்களின் முதுகுத் தண்டுவடம் நேராக இருக்கும் வகையில் அமர வேண்டும் மற்றும் உடல் நடுங்கக்கூடாது.
சிலருக்கு, பதற்றத்தில் கைகள் நடுங்கும். நேர்முகத் தேர்வு என்பது உயிரைப் பறிக்கும் போர்க் களமல்ல. அது ஒரு சாதாரண செயல்பாடுதான் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே, பதற்றமும், பயமும் தேவையில்லை. நமது கைகளை எதிர் மேசையில் வைக்கக்கூடாது. நாற்காலியின் கைகளின் மேலேயே வைத்துக்கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வின்போது, அவர்கள் கேட்கும் கேள்வியானது உங்களுக்கு சரியாக கேட்கவில்லை அல்லது புரியவில்லை என்றால், Beg your pardon sir என்றுதான் கேட்க வேண்டுமேயொழிய, மிகவும் சாதாரணமாக Repeat once again sir என்பதாக கேட்கக்கூடாது.
ஆடை மற்றும் அணிகலன்
நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது, உடையலங்காரம் என்பது மிகவும் முக்கியம். நன்றாக அயர்ன் செய்த, Formal உடையை அணிந்து செல்ல வேண்டும். Tuck in செய்து, ¤ அணிந்து செல்வது முக்கியம், மோதிரம் உள்ளிட்ட அணிகலன்களை தவிர்ப்பது நல்லது.
பெண்களைப் பொறுத்தவரை, கவர்ச்சியற்ற சுடிதார் மற்றும் சேலை போன்றவை சிறந்தவை. Lipstick மற்றும் அதிக மேக்கப் இல்லாமலும், மிகவும் உயரமான Heels செருப்பு அணியாமலும் இருத்தல் நலம். அதேபோன்று, பட்டுச்சேலை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு அறைக்குள் செல்லும்போது, கோயில் அல்லது வீட்டிற்குள் செல்வதைப்போல், ¤ அல்லது செருப்பை கழற்றிவிட்டு செல்லக்கூடாது. இதன்மூலம், உங்களின் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் இருப்பதோடு, சரியான நடத்தை முறைகளையும் பின்பற்றுதல் முக்கியம்.
கை குலுக்குதல்
நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழைகையில், கதவை லேசாக இரண்டு தட்டு தட்டிவிட்டு, பின்னர் மெதுவாக திறந்து நுழைய வேண்டும். உள்ளே நுழைந்தவுடன், நீங்களே, உடனே உங்கள் கைகளை குலுக்குவதற்காக கமிட்டி உறுப்பினர்களிடம் நீட்டக்கூடாது. அவர்கள் கையை நீட்டிய பிறகுதான் நீங்கள் குலுக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு சீரியசாக நடந்துகொண்டிருக்கும்போதே, யாரேனும் ஒரு உறுப்பினர் திடீரென்று ஒரு ஜோக் அடிக்கலாம். அதற்கு, அனைத்து உறுப்பினர்களும் சத்தமாக சிரிக்கலாம். ஆனால், அதற்காக, அவர்களுடன் சேர்ந்து நீங்களும் சத்தமாக சிரித்துவிடக்கூடாது. அதை மனதிற்குள் ரசித்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால், சிறிதளவு புன்னகையை வெளிப்படுத்தலாம்.
நேர்முகத் தேர்வில் இருக்கையில், நீங்கள் மிகவும் சீரியசாக மற்றும் படபடப்பாக இருப்பதாக காட்டிக்கொள்வதும் தவறு. சாதாரண முறையில், அதேசமயத்தில் கவனத்துடன் இருப்பதே நேர்முகத் தேர்வின் வெற்றிக்கு அடிப்படை. நேர்முகத் தேர்வின் முடிவில், தாங்க்யூ சார்ஸ் அன்ட் மேடம் என்று சொல்வதற்கு மறக்கக்கூடாது.


No comments:

Post a Comment