Pages

Friday, December 13, 2013

கற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்!...

நாம் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்கிறோம். கற்றல் செயல்பாடானது 24x7 என்ற தொடர்ந்த செயல்பாடாக நம் வாழ்வில் இடம்பெற்ற ஒன்று என்பதை புரிந்துகொள்பவரே புத்திசாலி.
ஒரு மனிதனுக்கு கற்றல் என்பது அவன் கருவறையில் இருக்கையிலேயே தொடங்கி விடுகிறது. அவனின் மரணம் வரையில் அது நீடிக்கிறது.
படித்தல் என்பது புத்தகப் படிப்பில் மட்டுமே அடங்கியது என்று நாம் நினைத்தால், உண்மையிலேயே சோர்ந்து விடுவோம். ஆனால், கற்றல் என்பது பரந்த அளவிலானது மற்றும் அது வெறும் புத்தகத்திற்குள் மட்டும் அடங்கியதன்று.
நாம் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைப் பார்க்கிறோம். உதாரணமாக, புதிய புத்தகம், புதிய திரைப்படம், புதிய பணி அனுபவம் மற்றும் புதிய பயணம் போன்ற அனைத்துமே கற்றல் செயல்பாடுகள்தான். நாம் இதற்கு முன்பு அறிந்திராத ஒன்றை, தற்போது புதிதாக அறிந்து கொள்வதே கற்றல் எனப்படும். ஆனால், விஷயம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த விஷயம் வாழ்வுக்கும், சிந்தனைக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
தங்கள் குழந்தையின் கற்றல் செயல்பாட்டை எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற கவலை அனைவருக்குமே இருக்கும். அதற்கான வழிமுறைகள் பல இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றைப் பற்றி இங்கே காண்போம்.
கவலையின்றி படித்தல்
ஒரு குழந்தை ஒரு புத்தகத்தைப் படிக்கிறதென்றால், அதை மனப்பாடம் செய்ய வேண்டுமே என்ற கவலையின்றி படித்தல் வேண்டும். ஒரு விஷயத்தை புதிதாக அறிந்துகொள்கிறோம் என்ற எண்ணம் மட்டுமே அந்தக் குழந்தைக்கு இருக்க வேண்டும். மனப்பாடம் செய்ய வேண்டுமே என்ற நெருக்கடியானது, ஒரு குழந்தைக்கு கவலையை உண்டாக்கி, அந்த விஷயத்தை அது அனுபவித்துப் படிப்பதை தடை செய்துவிடும்.
மேலும், ஒரு விஷயத்தை அனுபவித்துப் படிக்கும்போது, இயல்பாகவே, அந்த விஷயத்தின் பெரும்பகுதி நினைவில் பதிந்துவிடும். எனவே, மனப்பாடம் என்ற ஒரு செயல்பாட்டை குழந்தையிடம் திணிக்கக்கூடாது.
சுந்திரமான மனம்
"கலங்கிய நீரை தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருந்தால், அது எப்போதுமே தெளியாது. ஆனால், அதை அப்படியே தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டால், படிப்படியாக தெளிந்துவிடும்" என்பது புகழ்பெற்ற தாவோயிச தத்துவம். அதுபோல்தான் நமது மனமும். அதற்கு தொந்தரவும், நெருக்கடியும் தராதவரை, அது சிறப்பாக செயல்படும். எனவே, உங்கள் குழந்தையை தொந்தரவு செய்யாமல், எந்த செயலையும், சுதந்திரமாக செய்யவிடுங்கள்.
அந்த வகையில் உங்கள் குழந்தை ஒன்றை படித்துமுடித்தப் பிறகு, அதை திரும்பவும் அதனிடம் கேட்கவும். அப்போது, தான் படித்த விஷயத்தை, அதனுடன் தொடர்புடைய அம்சங்களுடன் இணைத்து சொல்லும் திறனை உங்கள் குழந்தைப் பெறும். உதாரணமாக, ஒரு கதையைப் படித்திருந்தால், அதனோடு தொடர்புடைய கதாப்பாத்திரங்கள் மற்றும் பிற கருத்தாக்கங்களுடன் இணைத்து சொல்லும். இதன்மூலம், அந்த கதையானது, குழந்தையின் நினைவில் நீண்டகாலம் மறக்காமல் பசுமையாக நிலைத்திருக்கும்.
மூளையிலுள்ள சைனாப்டிக் இணைப்புகள் தூண்டப்படுகையில் அல்லது இருக்கும் இணைப்புகள் வலுப்படுத்தப்படுகையில், நினைவுகள் உருவாகின்றன. இந்த வகையில், ஒரு குழந்தை, தான் படித்ததை ஒவ்வொரு முறை நினைவுகூறும்போதும், அந்த இணைப்புகள் வலுவடைகின்றன.
எனவே, அழுத்தமற்ற சூழலில், ஒரு விஷயத்தை ஆழமாக புரிந்து படிக்கையில், அது நல்ல முறையில் நினைவில் நிற்கிறது. ஆனால், இந்த செயல்பாடானது, தேர்வு நெருங்கும் சமயத்தில் பின்பற்றத்தக்கதல்ல. ஒரு புதிய கற்றல் செயல்பாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை.
இலக்கு மதிப்பெண் அல்ல...
மூளையின் இயல்பான செயல்பாட்டு அடிப்படையில் ஒரு விஷயத்தை கற்பதானது, மகிழ்ச்சியைத் தரும். அந்த செயல்பாட்டின் அடிப்படையிலேயே, உங்கள் குழந்தைக்கு பயிற்சியளிக்க வேண்டும். இதன்மூலம், வெறும் பள்ளி பாடப்புத்தகத்தோடு உங்கள் குழந்தை முடங்கிவிடாது.
வெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே பழக்கப்படுத்தப்பட்ட மற்றும் மதிப்பிடப்படும் குழந்தைகள், தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையில் பெரிதாக எதையும் சாதித்ததில்லை. அவர்களால் சாதிக்கவும் முடியாது. ஆனால், அறிவின் உண்மையான ஆழத்தைத் தேடி, படிப்பதற்கு பழக்கப்படுத்தப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில அதிகமாக சாதிப்பார்கள்.
இதுபோன்ற பயிற்சிகளால், ஒரு குழந்தை அதிகபட்ச மதிப்பெண்களைப் பெறாமலும் போகலாம். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைவார்கள். ஏனெனில், இந்திய கல்வித்திட்டமானது, முழு அறிவுத்திறனை பரிசோதிக்கும் செயல்பாடாக இல்லை. இயல்பான மற்றும் ஆர்வத்துடன் கூடிய கற்றலே, குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உகந்தது.


No comments:

Post a Comment